சென்னையில் உள்ள சில நியாயவிலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணைத் தொகை வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் கடந்த ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, நேற்று (ஜூன் 15) முதல், ரூ. 2,000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜூன் 16) காலை, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடைக்கு முதல்வர் ஸ்டாலின் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொதுமக்களுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ.2000, மளிகை தொகுப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், சென்னை ராயப்பேட்டை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி லாய்ட்ஸ் காலனி, டிடிகே சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தி, அங்கும் பொதுமக்களுக்கு பொருட்களையும் நிவாரணத் தொகையையும் வழங்கினார்.

இந்த ஆய்வுகளின்போது, உதயநிதி எம்எல்ஏவும் உடனிருந்தார்.