வேர்களை விட்டுவிட்டுக் கிளைகளுக்கு மருந்து அடிப்பது போல், மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றாமல் நீட் போன்ற எந்தப் பிரச்சினைக்கும் உரிய தீர்வை அடைய முடியாது என்று காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பா.குமரய்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

”மண் சார்ந்த கல்வியை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காகத்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பிதாமகர்கள், மாநிலப் பட்டியலில் கல்வியைக் கொண்டுவந்து சேர்த்தனர். பிரதமராக இருந்த இந்திரா காந்தி, எந்த மாநில முதல்வரையும் கலந்து ஆலோசிக்காமல், எந்தவிதமான கருத்து ஒற்றுமையையும் உருவாக்காமல், தன்னிச்சையாகவே கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். இது முழுக்க, முழுக்க யதேச்சதிகாரத்தின் சாயல் படிந்த நடவடிக்கை ஆகும்.

நீட் விவகாரத்தில் இருந்து புதிய கல்விக் கொள்கை வரை, மத்திய அரசுக்கு எதிராக ஒரு துவந்த யுத்தத்தை நடத்தும் நம்முடைய முதல்வர் ஸ்டாலின், குறைந்தபட்சம் தென்மாநிலங்களில் உள்ள முதல்வர்களோடு தொடர்புகொண்டு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். வேர்களை விட்டுவிட்டுக் கிளைகளுக்கு மருந்து அடிப்பது போல், மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்றாமல் நீட் போன்ற எந்தப் பிரச்சினைக்கும் உரிய தீர்வை அடைய முடியாது என்பதுதான் உண்மை.

முதல்வர் ஸ்டாலின் முதலில் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா ஆகிய 4 மாநில முதல்வர்களையாவது தொடர்புகொண்டு கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், இழந்த மாநில உரிமையை மீட்டெடுப்பதில் தனது முழுமையான கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என்றும் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.