தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 65 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்தது. இரட்டை இலை சின்னத்தில் கூட்டணி சார்பில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களைப் பெற்றன.

இந்நிலையில், 66 இடங்களைப் பெற்ற அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை கட்சித் தலைவராக யார் அமர்வார்கள் என்பதற்கான போட்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நீடித்தது. மே 7ஆம் தேதி நடந்த கூட்டத்தில் இரு தரப்பிலும் காரசாரமாக மோதிக்கொண்டதாகத் தகவல் வெளியான நிலையில், முடிவெடுக்கப்படாமலேயே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவை தொடங்க உள்ளதால், உடனடியாக எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று (மே 10) மீண்டும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் தொடங்கியது. கூட்டம் நடக்கும் அலுவலகம் முன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்ததும் கூட்டம் தொடங்கியது.

இக்கூட்டத்தில், நீண்ட விவாதங்களுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தேர்வு.

— AIADMK (@AIADMKOfficial) May 10, 2021

இந்த முடிவை அடுத்து, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்துக்கு வெளியே உற்சாகமாக அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இம்முடிவால் ஓபிஎஸ் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படும் நிலையில், கூட்டம் முடிந்தபின் முதல் ஆளாக வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here