நீலகிரி மாவட்டத்தில் 112 பதற்றமான வாக்கச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகள் இணையத்தில் நேரலை செய்யப்பட்டு நேரடியாகக் கண்காணிக்கப்படும் என்று ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 49 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தொடர்ந்து, வேட்பு மனுத் தாக்கல் வரை புதிதாக பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் இடம் மாறிய வாக்காளர்கள் பெயரை நீக்கம் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
களத் தணிக்கையின்போதும் விடுப்பட்ட வாக்காளர்களின் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் பெற்றும், இடம்பெயர்ந்த மற்றும் இறந்துபோன வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு, துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி தற்போது 1,901 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் நிலவரம்:
உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் (108), 98,690 ஆண் வாக்காளர்கள், 1,07,186 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 6 பேர் என மொத்தம் 2,05,882 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கூடலூர் தனித் தொகுதியில் (109) 92,366 ஆண் வாக்காளர்களும், 96,789 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,89,155 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் (110) 91,567 ஆண் வாக்காளர்களும், 1,00,344 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1,91,913 வாக்காளர்கள் உள்ளனர்.
மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2,82,623 ஆண் வாக்காளர்களும், 3,04,319 பெண் வாக்காளர்களும் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 6 திருநங்கைகள் மற்றும் குன்னூர் சட்டப்பேரவையில் 2 திருநங்கையர் என மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ”நீலகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 5,86,950 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதியில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 112 பதற்றமான வாக்கச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகள் இணையத்தில் நேரலை செய்யப்பட்டு நேரடியாகக் கண்காணிக்கப்படும். இந்த வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவுப் பணியில் 5,700 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் 3,992 பேர் தபால் வாக்களித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் மே மாதம் 2-ம் தேதிக்குள் வாக்களிக்கலாம்.
மாவட்டத்தில் இதுவரை ரூ.2.46 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.2 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2490 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து, 2,276 பேர் வாக்களித்துள்ளனர். மீதமுள்ளவர்களின் தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்நேரமும் அந்த அலுவலகங்களில் வாக்களிக்கலாம்” என்று ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.