தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், துறைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகப் பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கரோனா தீவிரம் காரணமாகத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

பிளஸ் 2 தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது தேர்வு விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 8-ம் தேதி அரசின் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு மே 7-ம் தேதி பதவியேற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நேரடி முறையில் நடைபெறும். எனினும் தொற்றுப் பரவலால் தேர்வு தள்ளிப்போகிறது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்துத் தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல்களுக்கு மத்தியில் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்று கூறியுள்ளது. இந்த முடிவைப் பொறுத்துத் தமிழகத்திலும் பொதுத் தேர்வு குறித்து முடிவெடுக்கலாம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து தேர்வு விவகாரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.