பாண்டிய நாடு, அதன் அரசா்களின் வரலாறு குறித்துப் பல நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.வி.இராமன், குடந்தை என்.சேதுராமன், எஸ்.ஏ.கீயு.ஹுசைனி எழுதியவையாகும். பெரும்பாலும் இந்த நூல்கள் பாண்டிய நாட்டின் அரசியல் சரித்திரத்தை விவரித்துள்ளன. ஆனால், வரலாற்று ஆய்வாளர் வெ.வேதாசலம் எழுதிய ‘பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும்: கி.பி.900 – 1400’ என்ற நூல் மேற்கூறியவற்றிலிருந்து மாறுபட்டது. பாண்டிய நாட்டின் அரசியலை எழுதாமல், அதன் சமுதாயம், குடிகள், நிலம் சார்ந்த நிர்வாகம், நிலவுடைமை, வாழ்க்கை நடைமுறை போன்றவற்றின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளார் நூலாசிரியர்.

இந்த நூலின் வீச்சு மிகவும் பரந்துபட்டது. பாண்டிய நாட்டுச் சமூகம், அதன் குடிகள், பின்னா் எழுந்த சாதிகள், தமிழ்நாட்டில் தோன்றிய வலங்கை – இடங்கைப் பிரிவுகள், இடைக்குடி அடிமைகள், துறவு வாழ்வில் பெண்கள், தேவரடியாள், பதியிலார், உடன் மாய்தல், தத்தெடுத்தல், பெண்களுக்கு நிலவுரிமை போன்றவற்றைப் பற்றி வேதாசலம் மிகத் துல்லியமாக ஆய்ந்து எழுதியுள்ளார். மேலும், இடைக்காலப் பாண்டிய நாட்டில் (கி.பி. 900 – 1400) சைவம், வைணவம், பக்தி இயக்கம், சமணம், கிராம தெய்வங்கள், பெளத்தம், மக்களிடையே இருந்த நம்பிக்கைகள், மரபுவழி வழிபாடு இவையெல்லாம் எவ்வாறு தழைத்தன என்றும் விவரித்துள்ளார்.

டைக்காலப் பாண்டிய நாட்டின் கட்டிடக் கலை, அதன் குடைவரைக் கோயில்கள், கட்டிடக் கோயில்கள், மண்டபங்கள், அரண்மணைகள், கல்விச் சாலைகள், கோயில்களில் இசைக்கப்பட்ட இசை, சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், செப்புத் திருமேனிகள், கோயில்களில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள், கூத்துகள், அவற்றில் உபயோகிக்கப்பட்ட விளக்குகள் போன்றவற்றைப் பற்றி மிகவும் சுவைபட எடுத்துக் கூறியுள்ளார். பாண்டிய நாட்டில் நூற்றுக்கணக்கான கோயில்கள் எடுப்பித்தபோது, எவ்வாறு அந்தக் கோயில்களின் விளக்குகளுக்காக எண்ணை விற்ற வணிகர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் என்பதைச் சுவைபடக் கூறுகிறார். பாண்டிய நாடு என்பது சங்க இலக்கியங்களில் தென்னன் நல் நாடு என்றும், தென்புலம் என்றும் திசையைக் காட்டும் பெயரால் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று இந்நூல் கூறுகிறது. மன்னா்கள் மட்டுமே பாண்டியர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனராம்.

தமிழ்நாட்டு வரலாற்றில் சங்க காலத்தைப் பொறுத்தமட்டில் சமுதாயமானது நில இயற்கையையும் தொழிற்பண்பையும் அடிப்படையாகக் கொண்டதையும், குடிகள் நிறைந்த குடிமுறைச் சமூகமாக விளங்கியுள்ளதையும் விவரிக்கிறார். மிக முக்கியமாக, இடைக்காலப் பாண்டி நாட்டுச் சமுதாயம் எவ்வாறு மூன்று அடுக்குகளாகச் செங்குத்தாக வேறுபட்டு நின்றது என்று விளக்குகிறார். நிலவுடைமைக் குடிகள், கைத்தொழில் செய்த இடைநிலைக் குடிகள், சமுகத்தின் அடிமட்டத்தில் இருந்த கடைநிலைக் குடிகள் என்ற மூன்று சமூக அடுக்குகளைக் கொண்டதாய் அமைந்திருந்தது என்கிறார். கைக்கோளர், சாலியா், தட்டார், கொல்லா், குயவா் போன்ற பல குடிகள் சமூகத்தில் இடைநிலை மதிப்பைப் பெற்றிருந்தன. உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்த பறையா், பள்ளர் போன்றோர் சமூகத்தினர் கடைநிலையராய் இருந்தனா் என்கிறார். இதனால், ஒரு குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த நிலவுடைமை மற்றும் தொழில் அடிப்படையில் அமைந்த குடிமுறைச் சமூகமாக இடைக்காலப் பாண்டிய நாட்டுச் சமுதாயம் விளங்கியது தெரியவருகிறது.

பாண்டிய நாட்டுச் சமுதாயம் செங்குத்து நிலையில் வேறுபாடுகள் கொண்டதாக இருந்தது என்று வேதாசலம் கூறியுள்ளார். மேலும், சாதி என்று சொல்லுக்குப் பதிலாகக் குடி என்ற சொல்லே கல்வெட்டுகளில் மக்கள் பிரிவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 12-13-ம் நூற்றாண்டுகள் அளவில் குடியைக் குறிக்க சாதி என்ற சொல் வந்துவிட்டது. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாட்டுக் குடிமுறைச் சமூகத்தில் வலங்கை, இடங்கை என்ற தொழில் முறைப் பாகுபாடுகளே தோன்றின என்று கருத வேண்டியுள்ளது. மேலும், இடைக்காலத்தில் நான்கு வருணப் பாகுபாட்டுத் தாக்கத்தால் பிறப்பால் குடிகளிடையே வேறுபாடு கற்பிக்கும் முறை வந்துவிட்டது. இதையே பாண்டிய நாட்டுச் சமுதாய நிலை பற்றிய ஆய்வும் வெளிப்படுத்துகிறது என்று விளக்கம் தருகிறார் வேதாசலம்.

பிராமணர், வேளாளர், வணிகர், தச்சா், தட்டார், கொல்லர், மருத்துவா், நாவிதர், சோதிடா், உவச்சா், பள்ளா், பறையா், வாளிலார், வயிராகி, வணிகர், குயவா் போன்ற பல குடிகளைப் பற்றி ஆய்வுசெய்து சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறார். உவச்சா் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். குளம் இறைப்போர், கல் உடைப்போர், விறகிடுவோர், நந்தவனப் பணியாளர்கள் போன்ற பல குடிகளையும் பற்றி ஆய்ந்து ஆா்வத்தைத் தூண்டும் தகவல்களைத் தந்துள்ளார்.

இந்நூலில், கோயில்களில் பக்திப் பாடல்கள், திருப்பதியம் பாடுதல், பிரபாகரம் என்றால் என்ன, வேதம் ஓதுதல், பரிவாதினி என்கிற வீணை, உடுக்கை, பறை, எறிமணி, காளம், சங்கு, திமிலை, சண்டை, போன்ற இசைக் கருவிகளைப் பற்றி நூலாசிரியா் சேகரித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இசைக் கருவிகளின் பெயா்களை நீண்ட ஒரு பட்டியலாகவே தருகிறார். பாண்டிய நாட்டில் எளிய மக்களும் உயா்குடிகளும் அணிந்த ஆடைகள், ஆபரணங்கள், அவா்களின் சமையல், வாசனைத் திரவியங்கள், அவா்கள் உபயோகித்த பரிகலன்கள், நீா்நிலைகளைத் தோற்றுவித்தல், தண்ணீா்ப் பந்தல் அமைத்தல் போன்றவற்றைக் கூறுகிறார். மிக முக்கியமாக, எதிர்கால ஆய்வாளர்களுக்கு மிகுந்த துணை செய்யும் வகையில் பாண்டிய நாட்டுக் கோயில்கள், கலைகள், அரண்மணைகள், மண்டபங்கள், இருப்பிடங்கள், செப்புத் திருமேனிகள், அவற்றைப் பற்றிய கல்வெட்டுகள் இவையெல்லாம் எங்கே இருந்தன, இருக்கின்றன என்பதைப் பற்றி ஒரு நீண்ட பட்டியல் தரப்பட்டுள்ளன.

இடைக்கால பாண்டிய நாட்டைப் பற்றிக் கணக்கற்ற தலைப்புகளில் கல்வெட்டுகள், செப்பேடுகள், கட்டுரைகள், இலக்கியங்கள் போன்ற மூல ஆவணங்களை ஆய்வுசெய்தும், கள ஆய்வின் வழியாகவும் இந்நூலைப் படைத்துள்ளார் வேதாசலம். இந்நூல், சிறந்த ஆய்வின் வெளிப்பாடு; பாண்டிய நாட்டின் பன்முகத்தன்மையை ஒரு புதிய கோணத்தில் பார்க்கிறது!