புதுச்சேரியில் கரோனா தொற்று 43 ஆயிரத்தைக் கடந்த நிலையில், புதிதாக ஒரே நாளில் 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஏப். 08) வெளியிட்டுள்ள தகவல்:

“புதுச்சேரி மாநிலத்தில் 3,451 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி – 181, காரைக்கால் – 87, ஏனாம் – 10, மாஹே – 15 என, மொத்தம் 293 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 490 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,510 பேரும் என 2,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 687 ஆகவும், இறப்பு விகிதம் 1.59 சதவீதமாகவும் உள்ளது.

மேலும், இன்று 113 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 555 (93.79 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 89 ஆயிரத்து 359 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில், 6 லட்சத்து 33 ஆயிரத்து 708 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

சுகாதார பணியாளர்கள் 28 ஆயிரத்து 393 பேர் (62 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 16 ஆயிரத்து 302 பேர் (50 நாட்கள்), பொதுமக்கள் 40 ஆயிரத்து 59 பேர் (34 நாட்கள்) என மொத்தம் 84 ஆயிரத்து 754 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.