பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் பயணிகள் கூட்டமின்றிச் செல்கின்றன.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநில அரசு கடந்த 6-ம் தேதி முதல் வரும் 20-ம் தேதி வரை 14 நாட்களுக்கு பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.
ரயில்வே, சுகாதாரம், நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துறைமுகம், வங்கிகள், மின்னணு வணிகத்தினர், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர். இதனால், மின்சார ரயில்கள் கூட்டமின்றிச் செல்கின்றன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, மின்சார ரயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பணியாளர்களும், நிறுவனங்கள், அலுவலகங்களில் வழங்கிய அடையாள அட்டையுடன் கூடிய ஆவணங்களை வைத்திருத்திருப்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், மின்சார ரயில்களின் சேவையை பெரிய அளவில் குறைக்கவில்லை. இதனால், பெரும்பாலான நேரங்களில் மின்சார ரயில்கள் காலியாகவே செல்கின்றன’’என்றனர்.