தங்களின் புகாரை போலீஸார் புறக்கணித்ததாகக் கூறி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் தஞ்சம் புகுந்தனர்.

நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பில் 21 நரிக்குறவர்கள் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரின் வீட்டுக்கு, மயிலாடுதுறையில் இருந்து அடிக்கடி வரும் உறவினர்கள் மது அருந்திவிட்டு, அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் மோதலாக மாறவே நாகூர் போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன், ராமராஜ், ரவிக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நாகூர் போலீஸாரை கண்டித்தும், தங்கள் புகாரை போலீஸார் புறக்கணித்து விட்டதாகவும்கூறி, நரிக்குறவர்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப். 16) தஞ்சம் அடைந்தனர்.

தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று அவர்கள் கூறினர். மேலும், மயிலாடுதுறையில் இருந்து தங்கள் பகுதிக்கு அடிக்கடி வந்து தாக்குதலில் ஈடுபடும் மாவீரன் என்பவர் தலைமையிலான கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸாரை, நரிக்குறவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.