மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019 மே மாதம் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முதல் முறையாக நேற்று (ஜூலை 08) மாற்றியமைக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

2014 மே 26-ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தது. அப்போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வென்ற பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சரானார். 2019 மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தமிழகத்திலிருந்து பாஜகவுக்கு ஒரு எம்.பி. கூடத் தேர்வாகவில்லை. இதனால், மோடியின் 2-வது அரசில் தமிழகத்திலிருந்து யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பிறந்து வளர்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சர் என்று முக்கியத் துறைகளின் அமைச்சர்களாக இருந்தாலும், அவர்கள் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படவில்லை.

இந்நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 08) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது, முதல்வர், தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நல்குவதாகத் தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.