‘மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க சல்மான் கான் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்தார். இதன் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றி லலித் குமார் வெளியிட்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான ‘மாஸ்டர்’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் அதிக திரையரங்குகளில் வெளியாகி, அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. உலக அளவில் இந்தப் படத்தின் வசூல் நிலவரங்கள் குறித்து வர்த்தக நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி, வசூல் நிலவரங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தி ரீமேக் உறுதியாகியுள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் இயக்குநர் யார் என்பது இந்த மாத இறுதியில் தெரியவரும்.
முன்னதாக, ‘மாஸ்டர்’ படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஆனால், சல்மான் கான் நடித்தால் இன்னும் பெரிய அளவில் ரீச் கிடைக்கும் என்ற காரணத்தால், ரீமேக்கை உறுதி செய்திருக்கிறார்கள்.