23வது தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் தர்பார் அரங்கம் அருகே உள்ள புல்வெளியில் முதல்வர் பதவியேற்பு விழா தொடங்கியது. இன்று பதவியேற்கும் திமுக அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மதிமுக தலைவர் வைகோ, விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் , அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இப்பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் முறையாக கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து மு.க ஸ்டாலின் பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார். “கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான். சட்டப்படி அமைக்கப்பற்ற இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கை கொண்டிருப்பேன். இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையையும் நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக உண்மையாக எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் விருப்பு வெறுப்பை விலக்கிப் பல தரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன் என உளமார உறுதிமொழிகிறேன்’என்று உறுதிமொழியை வாசித்தார்.

அப்போது மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். இதைத்தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றனர்.