திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் உறுதி எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 07) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சைப் பராமரிப்பு மையத்தைத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, திருக்குவளையில் உள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு முதல்வர் சென்று, அங்குள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டார்.

கருணாநிதி பிறந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில், முதல்வர், ‘தலைவர் கருணாநிதியின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளோடு ஓயாது பணியாற்றி, உழைப்பால் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நான் எடுத்துக்கொள்ளும் உறுதி, தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்வார், பதவி என்பது பொறுப்பு, பொறுப்போடு மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்று. அதை மனதில் ஏற்று முதல்வர் பதவியைப் பதவியாகக் கருதாமல், பொறுப்பு என்று கருதி என் பயணம் தொடரும். அதைத்தான் அவர் பிறந்த வீட்டில் உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பு எழுதிக் கையொப்பமிட்டார்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.