கிரிக்கெட் போட்டியில் சக வீரருடன் மோதி காயமடைந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி தனது உடல்நலன் குறித்து தகவல் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் தொடர் நடந்து வருகிறது. இதில் குவெட்டா க்ளாடியேட்டர்ஸ் என்கிற அணியில் ப்ளெஸ்ஸி ஆடி வருகிறார். கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ப்ளெஸ்ஸி, பந்து பவுண்டரிக்குச் செல்வதைத் தடுக்க முற்பட்ட போது தனது அணியின் சக வீரர் முகமது ஹஸ்னைனுடன் மோதிக் கொண்டார்.
இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டு உடனடியாக அபுதாபியில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது அணி பேட்டிங் செய்யும் போதும் ப்ளெஸ்ஸி களமிறங்கவில்லை. ப்ளெஸ்ஸி குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்கள் பிரார்த்தனைகளை ட்வீட்டாகப் பகிர ஆரம்பித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று தனது உடல்நலன் குறித்து ப்ளெஸ்ஸி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “என்னை வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி. நான் மீண்டும் ஹோட்டலில் ஓய்வெடுத்து வருகிறேன். பலமாக மோதியதில் மூளையில் அதிர்ச்சியும் கொஞ்சம் நினைவிழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் குணமடைந்துவிடுவேன். விரைவில் களம் காணுவேன் என்று நம்பிகிறேன். அனைவருக்கும் என் அன்பு” என்று ப்ளெஸ்ஸி ட்வீட் செய்துள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், ப்ளெஸ்ஸி ஆடி வரும் க்ளாடியேட்டர்ஸ் அணியில் கடந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவு வீரர் ஆண்ட்ரே ரஸலுக்கும், பவுன்சர் பந்து தலையில் பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டு ஆட முடியாமல் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.