கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கண்டித்து கும்பகோணம் மேலக்காவேரி பாலத்தின் அருகே காவிரி ஆற்றுக்குள் இறங்கி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் தலைமை வகித்தார்.

அப்போது, கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது. மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் உடனடியாக தலையிட்டு மேகேதாட்டுவில் நடைபெறுவதாக கூறப்படும் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மாதந்தோறும் முறைப்படி கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர் உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

அனைத்து விவசாயிகள் சங்கங்களையும் முதல்வர் அழைத்து பேசி பிரதமரிடம் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரில் வீசினர். பின்னர், கும்பகோணம் கோட்டாட்சியரிடம் முதல்வருக்கான கோரிக்கை மனுவை அளித்தனர்.

தஞ்சாவூரில்…

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் துரை.பாஸ்கரன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் திருப்பதி வாண்டையார், மண்டலத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட துணைத் தலைவர் விஜயகுமார், மாவட்ட நிர்வாகி பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல, பாபநாசம், ஊரணிபுரம் ஆகிய இடங்களில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.