கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் நீர்வழித் தடங்களில் ரூ.1.60 கோடியில் 60.60 கி.மீ. தொலைவுக்குத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன என கரூர் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உளளது. மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதற்காகக் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் உள்ள நீர் வழித்தடங்களை ரூ.1.60 கோடியில் தூர் வார உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டக் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாரிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் இன்று (ஜூன் 5-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புகழூர் வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளைக் கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ”நிகழாண்டு பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள், வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மூலம் 10 இடங்களில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். 10 இடங்களில் இரு பாசன வாய்க்கால்கள் 25.60 கி.மீ., 8 வடிகால் வாய்க்கால்கள் 35 கி.மீ. என 60.60 கி.மீ. தூரத்திற்கு வடிகால் கால்வாய்கள் ரூ.1.60 கோடி செல்வில் தூர் வாரப்படுகின்றன.

கடந்த மே 28-ம் தேதி இப்பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 30 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வரும் 12-ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும் இதன் மூலம் 9,704 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்” என்று விஜயராஜ்குமார் தெரிவித்தார்.

அப்போது பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை காவிரி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்ட உதவி செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேசன், உதவிப் பொறியாளர்கள் ஸ்ரீதர், கார்த்திக் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து நொய்யல், முத்தனூர், நஞ்சைப் புகழூர் ஆகிய இடங்களில் புகழூர் வாய்க்காலிலும், செவ்வந்திப் பாளையம், முனியப்பனூர், நெரூர் ஆகிய இடங்களில் நெரூர் வாய்க்காலிலும், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், கோட்டைமேடு, இனுங்கூர் ஆகிய இடங்களில் வடிகால் வாரிகளிலும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் கண்காணிப்பு அலுவலர் சி.விஜயராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.