மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று பதவி ஏற்றார்.
ஆளுநர் மாளிகையில் இன்று நடந்த எளிய நிகழ்ச்சியில், ஆளுநர் ஜெக்தீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக, 50 முக்கிய விஐபிக்கள் மட்டுமே பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
சமீபத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 213 இடங்களில் வென்று திரிணமூல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றது.
இதையடுத்து, மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். வெள்ளைப் புடவை, வெள்ளை சால்வை அணிந்து வந்திருந்த மம்தா பானர்ஜி, காலை 10.45 மணிக்கு வங்காள மொழியில் பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தபின் முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன். உலகில் உள்ள பலரும், இந்த தேசமும் மே.வங்கத்தில் தேர்தலில் என்ன நடக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.
என்னுடைய முதல் முன்னுரிமை என்பது மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுதான். அனைவரும் அமைதி காத்து, வன்முறையில்லாத சூழலை உருவாக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மேற்கு வங்க மாநிலம் வன்முறையை விரும்புவதில்லை, வன்முறையை நான் ஆதரிக்கமாட்டேன்.
கடந்த 3 மாதங்களாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படிதான் அரசாங்கம் செயல்பட்டது. பல திறமையற்றவர்கள் பணியில் உள்ளனர். ஆனால் நான் வந்துள்ளதால், நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
ஆளுநர் ஜெகதீப் தன்கர் நிருபர்களிடம் கூறுகையில், “மாநிலத்தின் நிர்வாகம் அரசியலமைப்புச் சட்டப்படியும், சட்டத்தின்படியும் செயல்பட வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி எனக்கு இளைய சகோதரி போன்றவர். மூன்றாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதானது. மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கையை முதல்வர் எடுப்பார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.