தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் உரையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும். குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்ட்’ வழங்கப்படும்.

கொரோனா வைரஸ்

கோவிட் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை விரைவாக மீட்டெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. சிறுகடன் பெற்றுள்ளவர்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு முதல்-அமைச்சர் எடுத்துச் சென்றுள்ளார்.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்திற்கு நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கால அளவும், 15 சட்டரீதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான கால அளவும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்…உழவர் சந்தை மீண்டும் வருகிறது- ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டம் தயார்: கவர்னர் உரையில் அறிவிப்பு

தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்பட வேண்டிய தொழில் வரியை செலுத்துவதற்கான கால அளவும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும் சென்னை, பெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.

மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.