ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான ஸ்டீவ் ஸ்மித்தின் பிறந்தநாள் இன்று (ஜூன் 2).

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் உள்ள கோகார்க் எனும் ஊரில் 1989-ம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் பிறந்தார். கிரிக்கெட் உலகில் ஒரு சுழற்பந்து வீச்சாளராகத்தான் அவர் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் லெக் ஸ்பின்னராக இருந்த ஸ்மித், 2007-8-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கே.எஃப்.சி லீக் போட்டியில், நியூ சவுத் வேல்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். 2010-ம் ஆண்டு ஜூலை மாதம், அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார். அவரது முதல் கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்தது.

ஆரம்ப காலகட்டத்தில், அவரது குருநாதராக முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இருந்தார். பிற்காலத்தில் பந்துவீச்சை கைவிட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்திய ஸ்டீவ் ஸ்மித், உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். 77 டெஸ்ட் போட்டிகளில், 7540 ரன்களைக் குவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித், அதில் 27 சதங்களை அடித்துள்ளார். 128 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மித், 4,378 ரன்களைக் குவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்கியுள்ளார். இதில் 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை அவர் கேப்டனாக இருந்து பெற்றுத்தந்தார். பிற்காலத்தில் 2018-ம் ஆண்டில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்மித்துக்கு ஓராண்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தடையில் இருந்து 2019-ம் ஆண்டின் இறுதியில் மீண்டுவந்த ஸ்மித், தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நம்பர் 1 வீரராக விளங்கி வருகிறார்.