‘மோகன் தாஸ்’ படத்தில் விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘காடன்’ மற்றும் ‘ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இதனைத் தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். இதில் கெளதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், இயக்குநர் கெளரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் விஷ்ணு விஷால். இதையும் நாயகனாக நடித்துத் தயாரிக்கவுள்ளார்.

‘மோகன் தாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும், விஷ்ணு விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பூஜை நடத்திப் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.