இங்கிலாந்து வீரர்கள் கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 9 அறிமுக வீரர்களுடன் புதிய அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வியாழக்கிழமை தொடங்கும் இந்தத் தொடர் ஜூலை 13-ம் தேதி முடிகிறது. 

இந்தச் சூழலில் இங்கிலாந்து வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 3 வீரர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அணியில் உள்ள உதவியாளர்கள், ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஒருநாள் அணியில் இருந்த அனைத்து வீரர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு கை விரலில் ஏற்பட்ட காயம் குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ளார். இதையடுத்து, இளம் வீரர்கள், கவுண்ட்டி வீரர்களை வைத்துப் புதிய அணியை இன்று அவசரமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் 9 வீரர்கள் இங்கிலாந்து அணியில் அறிமுகமாகின்றனர். மொத்தம் 18 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி விவரம்:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேக் பால், டேனி பிரிக்ஸ், பிரிடன் கார்ஸ், ஜாக் கிராளி, பென் டக்கெட், லூயிஸ் கிரிகோரி, டாம் ஹெல்ம், வில் ஜேக்ஸ், டேன் லாரன்ஸ், சக்யுப் முகமது, டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், மாட் பார்கின்ஸன், டேவின் பெய்ன், பில் சால்ட், ஜான் சிம்ப்ஸன், ஜேம்ஸ் வின்ஸ்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஆஷ்லே கைல்ஸ் கூறுகையில், “மிகப்பெரிய தளத்தில் விளையாடுவதற்கு இளம் வீரர்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. கடந்த 24 மணி நேரத்துக்குள் பெரும்பாலான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இளம் வீரர்கள், உள்நாட்டளவில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பென் ஸ்டோக்ஸ் இதுவரை இங்கிலாந்துக்கு கேப்டனாக இருந்தது இல்லை. அவருக்கும் இது புது அனுபவமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.