கரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது. அது உருமாற்றம் அடையவும் வாய்ப்புள்ளது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கோவிட் முன்களப் பணியாளர்களுக்கு சிறப்புப் படிப்புத் திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

’’பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடனே இருக்க வேண்டும். ஏனெனில், கரோனா வைரஸ் இன்னும் நம்முடன்தான் இருக்கிறது. அது உருமாற்றம் அடையவும் வாய்ப்புள்ளது.

மத்திய அரசு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாகச் செலுத்துவதில் உறுதியாக உள்ளது. கோவிட் 2-வது அலையில், கரோனா வைரஸ் நம் முன்னால் என்ன மாதிரியான சவால்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பார்த்தோம்.

இன்னும் கூடுதலான சவால்களைச் சந்திக்க தேசம் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மனதில் வைத்துத்தான் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் கரோனா முன்களப் பணியாளர்களைத் தயார் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி 6 விதமான பணிகளுக்கு கோவிட் பணியாளர்களைத் தயார் செய்யும். அதாவது வீட்டு சிகிச்சை உதவி, அடிப்படை சிகிச்சை உதவி, நவீன சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரிகள் சேகரிப்பு உதவி மற்றும் மருத்துவ உபகரணங்கள் உதவி ஆகியவை இந்தப் படிப்பில் தனித்தனியாகக் கற்பிக்கப்படும்.

பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா 3.0 திட்டத்தின் மூலம் ரூ.276 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த சிறப்புப் பயிற்சியின் மூலம் மருத்துவத் துறை அல்லாத சுகாதாரத் துறை வல்லுநர்கள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் மூலம் சுகாதாரத் துறைக்கு வருங்காலத்தில் தேவைப்படும் மனிதவளம் பூர்த்தி செய்யப்படும்.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆக்சிஜன் தேவையை உறுதி செய்யும் வகையில் சுமார் 1,500 ஆக்சிஜன் பிளாண்ட்டுகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது’’.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.