அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை ஓரத்தில் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ மியாமி கடற்கரை ஒரத்தில் இருந்த 12 மாடி கொண்ட கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்தது. விபத்துக்குள்ளான கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது. கட்டிடத்தில் சமீப நாட்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 100-க்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக மீட்புப் பணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கட்டிடத்தில் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் தங்கி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்புப் பணியாளர்கள் தரப்பில், “ இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்துள்ளதால் மற்ற பகுதி அப்படியே நிற்கிறது. அவ்வாறு இருக்கையில் மீட்புப் பணி மேற்கொள்ளும்போது மிதமுள்ள கட்டிடமும் விழலாம். இதனால் சிறுதி அச்சத்தோடுதான் பணிகள் நடந்து வருகிறன. மீட்புப் பணியில் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதியில் அவசர நிலையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.