இ.பி.எஸ். தரப்பில் கொங்கு மண்டலத்தில் தான் அதிகமாக எம்.எல்.ஏக்கள் இருப்பதால் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியவர்களில் ஒருவருக்கு கொறடா பதவியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

சென்னை:

அ.தி.மு.க.வில் கட்சி நிர்வாகம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது கைகளிலும் இருக்கிறது. எனவே நிர்வாக ரீதியாக நியமனங்கள், முடிவுகளை எடுப்பதில் முட்டல், மோதல் என்பது மவுன யுத்தமாகவே தொடர்கிறது.

சட்டசபை எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பது நீண்ட இழுபறிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.

தலைவர் பதவிக்கு அடுத்ததாக துணைத் தலைவர், கொறடா பதவிகளுக்கு எம்.எல்.ஏக்கள் நியமிக்க வேண்டும். இது தொடர்பாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இருவரும் சந்தித்து பேசினார்கள். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது.

கொறடா பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் யார், யார் பேச வேண்டும் என்று முடிவு செய்யக்கூடியது கொறடா தான். எனவே இந்த பதவியை கைப்பற்றுவதிலும் இருவரது ஆதரவாளர்களும் குடுமிபிடி சண்டையில் இறங்கி இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ். தரப்பில் மனோஜ் பாண்டியனுக்கு வழங்க வற்புறுத்துகிறார்கள்.

இ.பி.எஸ். தரப்பில் கொங்கு மண்டலத்தில் தான் அதிகமாக எம்.எல்.ஏக்கள் இருப்பதால் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் ஆகியவர்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

இந்த பதவியை பெறுவதில் இரு அணியும் தீவிரமாக இருப்பதால் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.