ரத்தினகிரி அருகே டாஸ்மாக் கடையின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:

”ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தென்னந்தியாலம் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை (க.எண்: 11368) உள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் மதுக்கடை திறக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து, கடையில் 13 பெட்டிகளில் இருந்த உயர் ரக மதுபாட்டில்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையின் பக்கவாட்டுச் சுவர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இதுகுறித்து ரத்தனகிரி காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகா மீனா, ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி மற்றும் ரத்தினகிரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மதுக்கடையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ஸ்ரீதர், விற்பனையாளராக உள்ள சார்லஸ் ஆகியோர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதன்பிறகு கடையில் பதிவான கை ரேகைகள் சேகரிக்கப்பட்டன. மதுபானக் கடையின் பக்கவாட்டுச் சுவரைத் துளையிட்டு மது பாட்டில்களைத் திருடிச் சென்றது யாரென விசாரணை நடத்தி வருகிறோம்”.

இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருப்பதால் வெளிமாநில மது பாட்டில் விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்து வரும் நிலையில், சமீபகாலமாக மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் உடைக்கப்பட்டுத் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மூடப்பட்டுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.