மத்திய விஸ்டா திட்டத்தைத் தவிர்த்து வேறு எதையும் பார்க்க முடியாத வகையில் உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் ரோஸ் நிறக் கண்ணாடியை அகற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கட்டுவது, பிரதமருக்கு வீடு கட்டுவது உள்ளிட்டவற்றை அடக்கிய மத்திய விஸ்டா திட்டத்தை கரோனா காலத்தில் செய்யக் கூடாது. அதற்குச் செலவிடும் தொகையை மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்குச் செலவிடலாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், மத்திய விஸ்டா திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
https://2b45a4e6c2962c949a7c095e30be0e66.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “ஆற்றில் கணக்கிட முடியாத மனித சடலங்கள் அடித்து வரப்படுகின்றன. மருத்துவமனையின் முன் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள். மக்களின் வாழ்வாதார உரிமை கொள்ளையடிக்கப்படுகிறது. பிரதமரே, மத்திய விஸ்டா திட்டத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாத உங்கள் முன் இருக்கும் ரோஸ் நிறக் கண்ணாடியை அகற்றுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த இக்கட்டான நேரத்தில் தேவையுள்ள மக்களுக்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக ஸ்பீக் அப்டூ சேவ் லைவ்ஸ் என்ற பிரச்சாரத்தையும் ராகுல் காந்தி ட்விட்டரில் முன்னெடுத்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நிமிடம்வரை ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ஆக்சிஜன் பற்றாக்குறை, வென்டிலேட்டர்கள், ஐசியூ படுக்கைகள், தடுப்பூசிகள் போன்றவற்றுக்காக மக்கள் காத்திருப்பதையும், அலைபாய்வதையும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இந்த நேரத்தில் உதவுவதற்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், மாநிலத் தலைமை அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்துள்ளது. தேவையுள்ள மக்களுக்குப் படுக்கை வசதி, மருந்துகள், ஆக்சிஜன் கிடைக்க காங்கிரஸ் கட்சி உதவி வருகிறது.