வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் கொண்டுச் சென்று பிடிபட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுச் சென்றது விதிமீறல் எனத் தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அடுத்த நடவடிக்கை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் சென்னை தரமணி 100அடி சாலையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர், 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களை எடுத்துச் சென்று சிக்கினர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அந்த 3 பேரும் வேளச்சேரி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அவைகள் பயன்படுத்தாத இயந்திரங்கள் அவைகளை திரும்ப எடுத்துச் சென்றபோதுதான் பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்ததாகவும், அதில் வாக்குப்பதிவு எதுவும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற உதவி பொறியாளர் செந்தில்குமார், மாநகராட்சி ஊழியர்கள் வேளாங்கண்ணி, சரவணன் மற்றும் தற்காலிக ஊழியர் வாசுதேவன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 4 பேரும் காவல் நிலையத்தில் நாளை ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 50 நிமிடங்கள் அவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரியில் இருச்சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதி மீறல் என தெரிவித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

வேளச்சேரியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிட வாய்ப்புள்ளது, வேளச்சேரியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.