வாக்குப்பதிவு இயந்திரம் தனது உறுதித் தன்மையை இழந்திருக்கிறது. ஏனெனில் அது கண்டவர் கைகளிலும் நடமாடுகிறது என்று கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவைச் சந்தித்து மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:

”வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழந்து விடுவதும், மர்ம கண்டெய்னர்கள் நள்ளிரவில் வளாகங்களுக்குள் நுழைவதும், திடீரென வைஃபை வசதிகள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாவதும் லேப்டாப் உடன் மர்ம நபர்கள் நடமாடுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகின்றன.

தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்னும் நம்பிக்கையை வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையரே தெரிவித்துள்ளாரே?

வாக்குப்பதிவு இயந்திரம் தனது உறுதித் தன்மையை இழந்திருக்கிறது. ஏனெனில் அது கண்டவர் கைகளிலும் நடமாடுகிறது. ஸ்கூட்டரில் வாக்குப் பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும். இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பாகவும் பல தேர்தல்களில் நடைபெற்றிருக்கிறது.

வங்கி அருமையான திட்டமாக இருந்தாலும் அதில் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் என்பதைப் போலத்தான், வாக்குப்பதிவு இயந்திரம் நல்ல முறையில் இருந்தாலும் அதைப் பயன்படுத்துபவரின் நோக்கம் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இது பயத்தை ஏற்படுத்துகிறது.

தேர்தல் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது?

தேர்தல் ஆணையம் சரியாகச் செயல்படவில்லை என்பதுதான் எங்களின் புகார். இது வெறும் புகார் மட்டுமல்ல, என்ன சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம், எப்படி மேம்படுத்தலாம் என்று பரிந்துரைகளையும் தெரிவித்துள்ளோம்.

75 இடங்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மோசடி நடப்பதாகக் கூறுகிறீர்களா அல்லது அனைத்து இடங்களிலும் நடக்கிறதா?

விருந்தில் எந்த ஒரு ஓரத்தில் விரும்பத்தகாத பொருளை வைக்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்த இலையில், அது எந்த இடத்திலும் வரக்கூடாது. 75 இடங்களிலும் மோசடி நடக்கவில்லை, நான்கு இடங்களில்தான் மோசடி நடக்கிறது என்றால் 75 இடங்களுமே கெட்டு விட்டதாகத்தான் அர்த்தம். அதனால் இரண்டு, மூன்று இடங்களில் மட்டுமே நடக்கிறது என்று கவனக்குறைவாக இருந்துவிட முடியாது”.

இவ்வாறு கமல் பேசினார்.