புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகம் மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த குடும்பத்தினருக்கு சுயதொழில் தொடங்க ஆஷா என்ற திட்டத்தில் கடன் உதவி பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்திட்டம் வரவேற்கத்தக்கது. அதனடிப்படையில் புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ஆதிதிராவிட இன மக்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

கரோனாவால் மரணமடைந் தவர்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டும் பார்க்காமல் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விதத்தில் முதல்வர் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

யூனியன் பிரதேசமான டெல்லியில், குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் கரோனாவால் இறந்தால் அந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.2500, இழப்பீட்டுத் தொகையாக ஒருமுறை ரூ.50 ஆயிரமும் வழங்க அம்மாநில முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதை கருத்தில் கொண்டு புதுச்சேரி முதல்வர், கரோனாவால் மரணமடைந்தவர்களுக்கு குறைந்தது ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கிட உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்மூலம் சுமார் ரூ.9 கோடிதான் அரசுக்கு செலவாகும்.

கரோனாவால் பாதிப்படைந்து மரணமடைந்த எந்த குடும்பமாக இருந்தாலும் சாதி, மதம் என பிரித்துப் பார்க்காமல் அவர்களுக்கு உரிய உதவி கிடைத்திட முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.