கரோனாவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 1.72 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் சுமார் ரூ.86 கோடி மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வங்கி கணக்குகள் மூலம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக கடற்பகுதியில் மீன்கள் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை இரண்டு மாதங்களுக்கு விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினைச் சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றனர். மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல 2008-ம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையை தமிழக அரசு தடைக்காலம் முடிந்ததும்தான் வழங்கி வந்தது.

இந்நிலையில் கரோனா வினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண நிதியை முன்கூட்டியே வழங்குவதற்கு தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி கடந்த மே 23 அன்று தமிழக முதல்வரின் உத்தரவின்படி நடப்பாண்டுக்கு (2021-ம் ஆண்டு) 1.72 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை தலா ரூ.5000 வீதம் வழங்கிடும் பொருட்டு ரூபாய் 86.00 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையானது மீனவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.