கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சிகிச்சை முடிந்து, 10 நாட்கள் தனிமை, கடும் பரிசோதனைக்குப்பின் நேற்று அணியில் முறைப்படி சேர்ந்தார்.

இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிரன்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் 4ம் தேதி நடக்க உள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப்பின் 20 நாட்கள் இந்திய அணி ஓய்வில் இருந்தது. இந்த ஓய்வு காலத்தின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கடந்த 8-ம் தேதி அறிகுறி ஏதுமில்லாத கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இந்திய அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் தங்காமல் வேறு ஹோட்டலில் ரிஷப் பந்த் தங்கி இருந்தார் என்பதால், மற்ற வீரர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து, ரிஷப் பந்த் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு, பிசிசிஐ மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு, சீரான இடைவெளியில் கரோனா பரிசோதனையும் ரிஷப் பந்த்துக்கு எடுக்கப்பட்டது.

இதில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் ரிஷப் பந்த்துக்கு நெகட்டிவ் வந்ததையடுத்து, அவரை அணியில் சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மேலும், ரிஷப் பந்துக்கு இதயப் பரிசோதனையும் நடத்தப்பட்டது அதிலும் எந்தபாதிப்பும் இல்லை எனத் தெரியவந்தது.

பிசிசிஐ ட்விட்டரில் ரிஷப் பந்த் புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஹலோ ரிஷப்பந்த், இந்திய அணிக்குள் மீண்டும் இணைவதை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இது தவிர இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன், அலுவலர் தயானந்த் கிரானி ஆகியோரும் ரிஷப் பந்த்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இவர்களுக்கு கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 10 நாட்கள் தனிமையில் லண்டனில் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.