கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் இறப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதாக ஹைதராபாத் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹைதராபாத்தில் இயங்கும் மெடிகவர் மருத்துவமனை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

“கரோனா தடுப்பூசிகளின் முக்கியதுவம் இந்த ஆய்வு உணர்த்துகிறது. இந்த பரிசோதனையில் 12,000 முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்.இதன் முடிவில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டவர்களில் 13% தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2% பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. அதிலும் அவர்களுக்கு தொற்றால் தீவிர பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும், கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்டவர்களில் 2.8 % பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 0.4% பேர் மட்டுமே மருத்துவமனையில் சேர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடு கொண்ட பின் கரோனாவினால் பாதித்தால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 கோடியை கடந்ததுள்ளது.