டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் இளநிலை மருத்துவராக அனஸ் முஜாகித் பணியாற்றி வந்தார். கரோனா தொற்று காரணமாக கடந்த 9-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது டெல்லி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதிக்கான காசோலையை அவர் வழங்கினார்.

முதல்வர் கேஜ்ரிவால் கூறும் போது, ‘‘மருத்துவர் அனஸ் முஜாகித் போன்றோரின் தன்னலமற்ற சேவையால்தான் ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடிகிறது. கரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் சுகாதார ஊழியர்கள், முன்கள ஊழியர்களின் குடும்பங்களுக்கு டெல்லி அரசு நிவாரண நிதி, தேவையான உதவிகளை வழங்கி வருகிறது’’ என்று தெரிவித்தார்.

அனஸ் முஜாகித்தின் தந்தை மருத்துவர் முஜாகிதுல் இஸ்லாம் கூறும்போது, ‘‘எனது மகன் உயிரோடு இல்லை என்ற வருத்தம் அதிகமாக உள்ளது. எனினும் முதல்வரே நேரடியாக வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறி நிவாரண நிதி வழங்கியது சற்று ஆறுதலாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.