கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய அரசு முழுமையாக மெத்தனமாக இருக்கிறது. வைரஸ் சூழலைக் கையாண்டுவிட்டதாக அதீத நம்பிக்கையுடன் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பிரேசில், தென் ஆப்பிரி்க்காவில் பரவிவரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 4 பேர் இந்தியாவில் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்றுத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஜனவரி மாதம் அங்கோலா நாட்டில் இருந்த ஒருவர், தான்சானியாவில் இருந்து வந்த ஒருவர், தென் ஆப்பிரிக்காவில் இருந்த வந்த இருவருக்கு உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்(தென் ஆப்பிரிக்கவகை) இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில் “ இந்தியா24நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்குகிறது. தொடர்ந்து கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது. இந்த வைரஸ் குறித்த முழுமையான தகவல் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 11ஆயிரத்து 610 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்து 37 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 6 லட்சத்து 44 ஆயிரத்து 858 ஆக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய97.88 சதவீதம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். தற்போது நாட்டில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில் அரசு மெத்தனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் இன்று ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசு கரோனா வைரஸ் சூழல் குறித்து ஒட்டுமொத்தமாக மெத்தனமாக இருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியதாக அதீதமான நம்பிக்கையில் இருக்கிறது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.