கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் உலகம் முழுவதும் இதுவரை 12 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஓராண்டில் 1.14 கோடி மக்களுக்குக் கரோனா பரவியுள்ளது.

பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு கரோனா பாதிப்பு இனிமேல் ஏற்படாது என்று அலட்சியம் காட்டத் தொடங்கினர். மக்கள் முகக் கவசத்தைத் தவிர்ப்பது, கூட்டமாகக் கூடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடத் தொடங்கினர்.

இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குறைந்த கரோனா வைரஸ் பரவல், 2021 பிப்ரவரி 15-ம் தேதியன்று 10 ஆயிரத்துக்கும் கீழ் (9,139) சென்ற நிலையில், மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிலேயே அதிகபட்சமாகக் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 28,903 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மார்ச் 5-ம் தேதியன்று தொற்று எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது. தொடர்ந்து அதிகரித்து வந்த பாதிப்பு இன்று (மார்ச் 17) 945 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் 100-களில் இருந்த தொற்று பாதிப்பு, பிப்ரவரி 21-ம் தேதி 150-ஐத் தாண்டியது. மார்ச் 5-ம் தேதி 225-ஐ எட்டியது. மார்ச் 17-ம் தேதி 400-ஐ எட்டியுள்ளது (395).

இதற்கிடையே ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்கள் கூடுதல் கவலையை ஏற்படுத்துகின்றன. மார்ச் 16-ம் தேதி நடைபெற்ற மாநில அரசின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில், பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ”பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். எனினும் அது மட்டுமே தீர்வாகிவிடாது. திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளாலும், அரசியல் நிகழ்ச்சிகளாலும் தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் அதிகக் கூட்டம் கூடுகிறது. அதில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. இதனால் தொற்று இன்னும் அதிகரிக்கலாம்.

* கரோனாவுக்குப் பாகுபாடு தெரியாது. குழந்தை, இளைஞர்கள், முதியோர்கள் என யாராக இருந்தாலும் முகக்கவசம் அணியாமல், கை கழுவாமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் நிச்சயம் தொற்று பரவும்.

* சாலைகளில் நடந்து செல்வோர், பேருந்து, ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் கையுறையை அணிந்துகொள்ள வேண்டும்.

* பள்ளிகள், வங்கிகள், விடுதிகள், உணவகங்கள், சந்தைகள், அனைத்து மதச்சார்பற்ற கூட்டங்கள், கலாச்சாரக் கூட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* சந்தை, வணிக வளாகங்களில் பணியாற்றுவோர், ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்ட பொது வாழ்க்கையில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

* கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைப் போலவே இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் தொற்று படிப்படியாக அதிகரிக்கிறது. எனினும் நல்வாய்ப்பாக நம் கைகளில் தடுப்பூசி உள்ளது. முந்தைய கால அனுபவங்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் கவனத்துடன் இருப்பது அவர்களுக்கும் அவர்களால் பிறருக்கும் நல்லது” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

என்ன செய்ய வேண்டும்?

சாலைகளில் நடமாடுபவர்கள், பேருந்துகளில் பயணிப்பவர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையினர் முகக்கவசம் அணிவதில்லை. வணிக வளாகங்கள், சந்தைகள் ஆகியவற்றிலும் இந்நிலையேதான் உள்ளது. இனியும் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்லக்கூடாது.

முகக்கவசம் அணிவதை கவுரவக் குறைவாகவும், வசதிக் குறைவாகவும் நினைக்கக் கூடாது.

தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவது, கையுறைகளை அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை நன்றாகக் கழுவுவது, கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழக அரசு இதுகுறித்த விழிப்புணர்வை ஊடகங்களில் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் இரண்டாவது அலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.