கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதனுடன் மாணவர்களுக்கான பாடநூல்கள் வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. இது தவிர கல்வித் தொலைக்காட்சி மூலமாகத் தொலைக்காட்சிகளில் வகுப்புகள் நடக்கின்றன.

தற்போது கல்வித் தொலைக்காட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய பாடங்களுக்கான வகுப்புகள் கல்வித் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் கல்வித் தொலைக்காட்சிகளுக்குப் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.