கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழைக்குத் தொழிலாளி உயிரிழந்தார். பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடிக்கு மேல் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மலையோரப் பகுதி, மற்றும் தாமிரபரணி ஆற்றுக் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கடும் வெயில் அடித்து வரும் நிலையில், நேற்று (ஜூலை 09) இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இன்றும் (ஜூலை 10) இந்த மழை தொடர்ந்தது. கனமழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவியது. காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகளில் விழுந்தன. இதனால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மழையால் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

அதிகபட்சமாக களியலில் 110 மி.மீ. மழை பெய்தது. குழித்துறையில் 104 மி.மீ., பூதப்பாண்டியில் 47, சிற்றாறு ஒன்றில் 72, கன்னிமாரில் 74, கொட்டாரத்தில் 42, மயிலாடியில் 80, நாகர்கோவிலில் 68, பேச்சிப்பாறையில் 69, பெருஞ்சாணியில் 86, புத்தன் அணையில் 84, சிவலோகத்தில் (சிற்றாறு இரண்டு) 48, சுருளகோட்டில் 45, தக்கலையில் 43, குளச்சலில் 18, பாலமோரில் 62, மாம்பழத் துறையாற்றில் 72, கோழிப்போர்விளையில் 42, அடையாமடையில் 73, குருந்தன்கோட்டில் 60, முள்ளங்கினாவிளையில் 46, ஆனைகிடங்கில் 73, முக்கடல் அணையில் 55 மி.மீ. மழை பெய்தது.

பலத்த மழையால் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணை 45.37 அடியாக உள்ள நிலையில், அணைக்கு உள்வரத்தாக 1,466 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால், அணையில் இருந்து விநாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் உபரியாகத் திறந்து விடப்பட்டது.

இதேபோல், சிற்றாறு ஒன்று அணை நீர்மட்டம் 17 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு விநாடிக்கு 1,082 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. அணையில் இருந்து 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் உபரியாகத் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு நீர்வரத்து 944 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 72.71 அடியாக உள்ளது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பரிவு பொறியாளர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேறி வருவதால் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழைநீருடன் கலந்து அணை நீரும் கரைபுரண்டு ஓடுவதால் 6 ஆயிரம் கன அடிக்கு மேல்திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுகிறது. இதனால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்த நிலையில் அபாயகரமாகக் காட்சியளிக்கிறது. அருவி பகுதியில் யாரும் செல்ல வேண்டாம் எனப் பொதுப்பணித் துறையினர், போலீஸார் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கனமழையால் குமரி மாவட்டத்தில் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையுடன் சூறைக்காற்று வீசியதில் மரம் விழுந்து சேதமான மின்கம்பிகள், மற்றும் மின்கம்பங்களை மின்வாரியத்தினர் நேற்று சீரமைத்த பின்னர் பரவலாக காலை 11 மணிக்குப் பின்னரே மின் இணைப்பு சீரானது. கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி வேலய்யா (65) என்பவர், இன்று காலை மாதவபுரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மழையால் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல், வேலய்யா அதில் மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

மழையால் குமரி மாவட்டம் முழுவதும் ரப்பர் பால் வெட்டும் தொழில், செங்கல் சூளை, கட்டிடக் கட்டுமானத் தொழில் உட்பட அனைத்துத் தரப்பிலுமான பணிகள் பாதிக்கப்பட்டன. பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, வில்லுக்குறி பகுதிகளில் சூறைக்காற்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்து சேதமடைந்தன.