ஊரடங்கால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்தும் சுற்றுலா பயணிகள் வருகையின்றி பிரதான அருவிப்பகுதியும், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் கடை வீதியும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் பெய்யும். இதனால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவிகளில் குளிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதனால், குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. சாரல் சீஸன் முடிந்து, வடகிழக்கு பருவமழைக் காலத்திலும் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த ஆண்டில் கோடை மழை காரணமாக கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. சாரல் சீஸனும் தொடங்கி யுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசுகிறது. ஆனால், கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக, இந்த ஆண்டும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகளின்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த ஆண்டாவது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கும்போது குற்றாலம் அருவிகளில் குளிக்க அனு மதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், குற்றா லம் பகுதி வியாபாரிகளும் எதிர்பார்க் கின்றனர்.

அனுமதி அளிக்க வேண்டும்

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “குற்றாலத்தில் ஓராண்டில் 5 மாதங்கள் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களில் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் கூட்டம் குறைவாகவே இருக்கும். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் 5 மாதங்கள் மட்டுமே குற்றாலம் வியாபாரிகளுக்கு வருவாய் கிடைக்கும்.

சுற்றுலாப் பயணிகளை நம்பி ஏராளமான வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், கார், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் உள்ளனர். கடந்த ஆண்டில் சுமார் 9 மாதங்கள் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடித்தது. இந்த ஆண்டும் சாரல் சீஸன் தொடங்குவதற்கு முன்பே கரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கும்போது சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தாவது, குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும்” என்றனர்.