இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3,998 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர அரசு கரோனா புள்ளிவிவரங்கள் குறித்து 14-வது முறையாக மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் மட்டும் கூடுதலாக 3,509 பேர் உயிரிழப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால்தான் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு 3,998 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 42 ஆயிரத்து 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 7ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில், 1.30 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 1,040 பேர் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். அதாவது தொற்று அதிகரித்துள்ளது.

கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரத்து 687 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.36 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 3,998 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 18 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்ந்து 30 நாட்களாக கரோனா தொற்று விகிதம் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருந்து வருவது ஆறுதலுக்குரியது.

கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 52 ஆயிரத்து 140 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 44 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 273 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 41.54 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது