சட்டவிரோத பதிவுகளை நீக்காததால் ட்விட்டர் நிர்வாகத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

ரஷ்யாவின் மக்கள் தொகை 15 கோடியாகும். இதில் சுமார் ஒரு கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை விமர்சிப்பவர்கள், ட்விட்டரில் அதிக பதிவுகளை வெளியிடுகின்றனர்.

நிதி முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி தொடர்பான பதிவுகளை நீக்காத ட்விட்டருக்கு மாஸ்கோ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ரூ.85.63 லட்சம் அபராதம் விதித்தது. அதோடு ட்விட்டரின் இணைய வேகத்தையும் குறைத்தது.

ரூ.1.87 கோடி அபராதம்

இதைத் தொடர்ந்து வேறு சில விவகாரங்கள் தொடர்பாக மாஸ்கோவில் உள்ள டெகான்ஸி நீதிமன்றத்தில் ட்விட்டருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ட்விட்டர்நிர்வாகத்துக்கு நேற்று முன்தினம் ரூ.1.87 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ரஷ்ய ஊடக கட்டுப்பாட்டு அமைப்பான ரேஸ்காமோசர் கூறும்போது, ‘‘6 குற்றங்கள் தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நாங்கள் நீக்கக் கோரிய பதிவுகளில் 90 சதவீத பதிவுகளை ட்விட்டர் நீக்கிவிட்டது. எனினும் 10 சதவீத பதிவுகள் நீக்கப்படாமல் உள்ளன. விதிமீறல் தொடர்பாக கூகுள், டிக்டாக் ஆகியவற்றுக்கும் சிறிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது’’ என தெரிவித்துள்ளது.

அமெரிக்க சமூக ஊடகங் களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் ரஷ்ய அரசு சார்பில்பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ரஷ்யர்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு சர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று ரஷ்ய அரசு எச்சரித்துள்ளது. இதற்கு பேஸ்புக், ட்விட்டர் நிர்வாகங்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.