புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.


குறிப்பாக பஞ்சாப், உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான டெல்லியின் பல்வேறு எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் நடந்து வரும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு 6 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. கடைசியாக கடந்த 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. எனினும் சட்டங்களை திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.


எனவே இது குறித்து மந்திரிகள் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகளுடன், சுமார்41 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த பேச்சுவார்த்தை டெல்லி விஞ்ஞான் பவனில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. விவசாயிகளுடன் போராட்டம் இன்றுடன் 40-வது நாளை எட்டியுள்ளது. 


60 விவசாயிகள் உயிரிழப்பு
இந்த நிலையில், போராட்டத்தின் போது 60 விவசாயிகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பாரதிய கிசான் சங்க நிர்வாகி   ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி உயிரிழப்பதாகவும், இதற்கு பதிலளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.