தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 60 வயது வரை கூட்டு நோய் உள்ளவர்கள் என 1.60 கோடி பேருக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 160-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மையங்களில் முதலில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும், அடுத்த கட்டமாக காவல், உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் ஆன பிறகு, 2-ம் தவணையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 60 வயது வரை கூட்டு நோய் உள்ளவர்கள் என 1.60 கோடி பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் தொடங்கியுள்ளது. கரோனா பாதிப்புடன் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிற மாநிலங்களில் இருந்து வேலை ரீதியாக தமிழகம் வருபவர்கள் 72 மணிநேரத்தில் மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே திரும்பிச் செல்ல எந்த தடையும் இல்லை. அதேநேரம், வேலை ரீதியாக தமிழகம் வந்தவர்கள், இங்கேயே சில நாட்கள் தங்கினால் அவர்கள் கட்டாயம் 7 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதை சுகாதாரத் துறை கண்காணிக்கும். கரோனா 2-வது அலை ஏற்பட்டுவிடக் கூடாது என சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘ஒரு ரூபாய்க்கு முகக்கவசம்’

‘‘ஒரு ரூபாய்க்கே முகக் கவசம் கிடைக்கிறது. பொதுமக்கள் வாங்கி அணிவதில் சுணக்கம் காட்டக் கூடாது’’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். அப்போது ஒரு செய்தியாளர், ‘‘ஒரு ரூபாய்க்கு எங்கு கிடைக்கிறது?’’ என்று கேள்வி எழுப்ப, சற்று திணறிய அமைச்சர், சுதாரித்துக்கொண்டு, ‘‘அரசு இலவசமாக வழங்கும் முகக் கவசத்தை வாங்கி அணிய வேண்டும்’’ என்று கூறி சமாளித்தார்.