தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாட்டின் மொத்த தேவையில் 82 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த ஓராண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் ரூ.2,800 ஆக இருந்தது. இது தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ.5,021 ஆக அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் வரி விதிக்கின்றன. பெட்ரோல் விலையில் 58 சதவீதமும், டீசல் விலையில் 22 சதவீதமும் வரியாக உள்ளது. மத்திய அரசுக்கு 2020-21 நிதி ஆண்டில் பெட்ரோல், டீசல் வரி மூலமாக ரூ.5 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஏப்ரலில் தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. இதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.99.49-க்கும், டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.93.46-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரத்தில் செங்கல்பட்டு, வேலூர், கடலூர், விழுப்புரம், கோவை, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி உள்பட 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. சில மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101-க்கு விற்பனையானது.

இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என்ற அச்சமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.