எஸ். திவ்யதர்ஷினி

திருச்சி மாவட்ட புதிய ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை அருகே ரூ.1 கோடி ரொக்கம் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களால் மார்ச் 23-ம் தேதி இரவு கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட சிறப்பு பார்வையாளர் அளித்த தகவலின் பேரில் ஆட்சியராக இருந்த சு. சிவராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. ராஜன், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் மார்ச் 25-ம் தேதி இரவு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டார். இவர் இன்று (மார்ச் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான சிறப்பு முகாமில் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

எஸ்.பி. பொறுப்பேற்பு

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏ.மயில்வாகனன் நேற்று (மார்ச் 26) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பாக கோவை மாநகர தலைமையக துணை ஆணையராக பணியாற்றி வந்தார்.