சென்னை கோயம்பேட்டில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்தவர் உடல் கருகி உயிரிழந்தார்.

சென்னை கோயம்பேடு சாலையையும் பூந்தமல்லி சாலையையும் இணைக்கும் மேம்பாலத்தின் மீது ஹூண்டாய் அக்சண்ட் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கும்போது, கார் திடீரென தீப்பிடித்துள்ளது. காரின் முன்பக்கத்தில் தீப்பிடித்ததும், வாகனத்தின் ஓட்டுநர் மேம்பாலத்தின் மீது காரை நிறுத்திவிட்டு, தீக்காயத்துடன் கதவை திறந்து கொண்டு இறங்கி ஓடியுள்ளார்.

காரின் பின்பக்கம் அமர்ந்திருந்தவரால் கதவை திறக்கமுடியாத நிலையில் உள்ளேயே சிக்கிக் கொண்டார்.

தீ மளமளவென அதிகரித்த நிலையில், சாலையில் சென்ற சக வாகன ஓட்டிகளும் காரின் கதவை திறக்க முயன்று தோல்வியில் முடிந்தது. இதனால் காருக்குள் சிக்கியவரின் உடல் கருகி எலும்புக் கூடு மட்டுமே மிஞ்சியது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே கையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார் ஓட்டுநர் கொடுத்த தகவலில் உயிரிழந்தவர் வேலப்பன்சாவடியைச் சேர்ந்த 48 வயதான அர்ஜுனன் என்பது தெரியவந்தது.

டிராவல்ஸ் நிறுவனத்தின் இந்த காரில் அர்ஜுனன் பயணித்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. முழு ஊரடங்கு நாட்களில் பயன்படுத்தாமல் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை உரிய பராமரிப்பு இல்லாமல் அப்படியே எடுத்து இயக்கும் போது இதுபோன்ற தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏசிக்கு பயன்படுத்தப்படும் கேஸ் மற்றும் ஆயில் கசிந்தாலும் தீ விபத்து ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர்.