பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9-வது நாளாக இன்று உயர்த்தப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலையை இன்று லிட்டருக்கு 23 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 24 பைசாவும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பெட்ரோல் விலை கடந்த பிப்ரவரி 5-ம் தேதிக்குப் பின் பிப்ரவரி 8-ம் தேதி வரை மாற்றப்படாமல் இருந்து வந்தது. அதேபோல டீசல் விலையும் பிப்.8 வரை மாற்றப்படாமல் இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 11-ம் தேதி பெட்ரோல் விலை ரூ90-ஐத் தாண்டி விற்பனையானது. தொடர்ந்து 9 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.91.45 பைசாவில் இருந்து, ரூ.91.68 பைசாவாக அதிகரித்துள்ளது. டீசல் விலை ரூ.84.77 பைசாவிலிருந்து ரூ.85.01 பைசாவாக அதிகரித்துள்ளது.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதன்படி இன்று டீசல் விலை 85 ரூபாயைத் தாண்டியுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.