மோடி அரசில் நாட்டில் பெட்ரோல்- டீசலின் ஒரு நாள் விலை உயராமல் இருப்பதுதான் மிகப்பெரிய செய்தி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கரோனா ஊரடங்கால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ளதால் அவற்றின் விலையை உற்பத்தி செய்யும் நாடுகள் உயர்த்தி வருகின்றன.

இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. ஊரடங்கால் சில மாதங்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.93 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.69 ஆகவும் உள்ளது. போபாலில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.53 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.75 ஆகவும் உள்ளது. இதுவே மும்பையில் முறையே ரூ.102.82 ஆகவும் ரூ.94.84 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துத் தன் ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, ”மோடி அரசின் வளர்ச்சி என்பது ஏதாவது ஒரு நாளில் பெட்ரோல் மட்டும் டீசலின் விலை உயராமல் இருந்தால், அதுவே மிகப்பெரிய செய்தியாக மாறிவிடும் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றி பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, ”சமீபத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை கூடியதற்கு முக்கியக் காரணம் இதுதான். நாம் நமது எண்ணெய்த் தேவையில் 80 சதவீதம் வரை இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை உயர்வு நம் நாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.

அதேபோல பிரிக்ஸ் மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, ”பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலையில், எத்தனால் தயாரிப்பை இந்தியா அதிகரிக்க உள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.