மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை யின் ஒப்புதலை பெறும் திட்டம் தற்போதைக்கு இல்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் ஓடுதள விரிவாக்கப் பணியை விரைவில் மேற்கொள்ளக்கோரி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சுற்றுலா முகவர்கள் சங்கத் தலைவர் சதீஷ்குமார் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய விமான போக்குவரத்துத்துறை துணைச் செயலர் நரேந்திரசிங் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான வாய்ப்புகள், சர்வதேச விமானங்களின் தேவை, இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி, போதுமான ஓடுதள வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில்தான் ஒரு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படும். இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வேண்டும்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரும் திட்டம் தற்போதைக்கு இல்லை. மதுரை விமான நிலையம் 2010-ல் சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பெரிய ரக விமானங்கள் வந்திறங்க வசதியாக ஓடுதளம் விரிவாக்க மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஓடுதளம் 2286 மீட்டரிலிருந்து 3810 மீட்டராக அதிகரிக்கப்படும். ஓடுதளம் விரிவாக்கத்துக்காக கூடுதலாக 615.92 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலத்தை தமிழக அரசு இதுவரை தரவில்லை.

நிலம் கையகப்படுத்துதல் முடியாமல், ஓடுதளம் அருகே செல்லும் நெடுஞ்சாலையை மாற்றாமல் ஓடுதள விரிவாக்கப் பணியை மேற்கொள்ள முடியாது.

இந்நிலையில் மாநில அரசு, நெடுஞ்சாலையை வேறு பாதைக்கு திருப்பி விடுவதற்கு பதிலாக வாகனங்கள் செல்ல சுரங்கப்பாதை அமைத்தும், அதற்கு மேல் ஓடுதளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. சுரங்கப்பாதைக்கு மேல் ஓடுதளம் அமைக்க அதிக செலவாகும்.

பாதுகாப்பு பிரச்சினையும் ஏற்படும். இருப்பினும் இது தொடர்பாக விமான பாதுகாப்பு பிரிவுடன் ஆலோசிக்கப்பட் டுள்ளது. முடிவுக்காக காத்திருக் கிறோம்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதைப்பதிவு செய்து கொண்டு மனுக்களை முடித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.