பிரதமர் நரேந்திர மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் என அப்போது அவர் கூறினார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களைச் சொல்ல முடியாத துன்பத்தில் தள்ளியிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், உயிரிழக்கின்றனர்.

இந்த கரோனா 2-வது அலையிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் லாக்டவுனை அமல்படுத்தின. இந்த பாதிப்பு எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

நாடு முழுவதும் ஏப்ரல் – மே மாதங்களில் உச்சமடைந்த கரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சீராக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் அதேசமயம் தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் தொலைகாட்சி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:

உலகில் பெரும்பாலான நாடுகள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.

கரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். கரோனா தொற்றால் மருத்துவ துறையில் அடிப்படைவசதிகளை நாம் மேம்படுத்தியுள்ளோம்.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு உயர்த்தியிருக்கிறோம். இந்தியாவில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி தற்போது 10 மடங்கு உயர்ந்துள்ளது.

அனைத்து கட்டமைபைப்புகளையும்பயன்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மக்களை காப்பாற்றுவதற்காக முப்படைகளையும் பயன்படுத்தினோம்.

முகக்கவசம் சமூக இடைவெளி போன்றவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் கைவிட்டுவிடக்கூடாது. கரோனா நமது மிகப்பெரிய எதிரி. அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே.

தடுப்பூசி மூலம் பல லட்சகணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.

தடுப்பூசியை பொறுத்தவரையில் சில இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். தொடர்ந்து நாம் தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டு செல்வோம். இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து வேகப்படுத்தப்படும்.

தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன.

தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன.

இதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.