உத்தரப் பிரதேசத்தில் இனி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மட்டுமே அளிக்கப்படும். இதற்கான அதிரடி உத்தரவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இன்று வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு சூழல் நிலவுகிறது. இதைச் சமாளிக்க பாஜக ஆளும் உ.பி. அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதை, உ.பி.யின் கூடுதல் தலைமைச் செயலாளரான நவ்நீத் சேகால் வெளியிட்டுள்ளார். அதில் அவர், வீடுகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதைத் தடுக்க இந்த உத்தரவு இடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளரான நவ்நீத் சேகால் தனது உத்தரவில் கூறும்போது, ‘ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நம் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவற்றைச் சமாளிக்க ஆக்ஸிஜன் பதுக்கப்படுவதைத் தடுத்தால்தான் செய்ய முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் கண்காணிப்புக் குழு களமிறக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அவசர நிலையைச் சமாளிக்க மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரையை வாட்ஸ்அப்பில் பெற்றுக் காட்டினால்கூடப் போதுமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ஸிஜன் நிரப்பும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பிற்காக போலீஸாரை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இம்மாநிலத்திற்காக மத்திய அரசு 1500 மெட்ரிக் டன் எடையுள்ள ஆக்ஸிஜனை ஒதுக்கியுள்ளது.

இத்துடன், உ.பி.யிலுள்ள 31 அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதிரடி வேகத்திலான இப்பணிகள் முடிந்து, அடுத்த இரண்டு வாரங்களில் அவை உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.